Saturday 21 March 2015

மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
                                    
 இதுகுறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடித விவரம் வருமாறு:

 காவிரி ஆறு கர்நாடகத்தில் உருவாகி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்கிறது. 1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் ஸ்டான்லி அணை, 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் பாசனத்திற்காக காவிரி நீர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கருக்கான பாசன ஆதாரமாகவும், தமிழக மக்களில் 85 விழுக்காட்டினருக்கான, அதாவது 5 கோடி மக்களுக்கான குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது. காவிரி நதியால் பயனடையும் இன்னொரு மாநிலம் கர்நாடகம் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1935 ஆம் ஆண்டில் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டப்பட்டது.காவிரி ஆற்றின் துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட 4 அணைகள் 1970 ஆம் ஆண்டுகளில் அனுமதியின்றி கட்டப்பட்டன. தமிழ்நாடு & கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்சினை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போதிலும் அதற்கு இன்னும் தீர்வு காணப்படாதது வருத்தம் அளிக்கிறது. காவிரி நீரை பகிந்து கொள்வதில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. கடைசியாக காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே கடந்த 1924 ஆம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருந்தால் காவிரி பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. இதனால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை ஏற்று 3 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 02.06.1990 அன்று அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 25.06.1991 அன்று இடைக்கால தீர்ப்பையும், 05.02.2007 அன்று இறுதித் தீர்ப்பையும் வழங்கியது. இறுதித் தீர்ப்பில், காவிரியில் கிடைக்கும் தண்ணீரில் தமிழகம் 419 டி.எம்.சி., கர்நாடகம் 270 டி.எம்.சி., கேரளம் 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி. என பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரிலிருந்து தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்றும் காவிரி நடுவர் மன்றம் கூறியிருந்தது.

 அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியத்தையும், அதற்கு உதவுவதற்காக காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் அமைக்க வேண்டும்; புதிய பாசனத்திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்றும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகள் தாமதமாக, உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி, 19.02.2013 அன்று தான் இத்தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.

 மத்தியில் மாண்புமிகு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நீங்கள் கடந்த 12.06.2014 தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், ‘‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை நாங்கள் எடுப்போம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் நீதி வழங்க வேண்டும்’’ என்று வாக்குறுதி அளித்தீர்கள் என்பதையும், அதன்பின் 9 மாதங்கள் நிறைவடைந்து விட்ட போதிலும் தமிழகத்திற்கு நீதி வழங்கப்படவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடக அரசு தொடங்கிவிட்டது. 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள இந்த அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உலக அளவில் ஒப்பந்தப்புள்ளிகளை கர்நாடக அரசு கோரியிருக்கிறது.

இதற்காக விண்ணப்பித்த சர்வதேச நிறுவனங்களில் 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. இதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோதமானது என்பதுடன், ஒன்றுபட்ட இந்தியா என்ற தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் தன்னிச்சையாக அணைகளை கட்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் அது வனவிலங்குகளை பாதிக்கும் என்று கர்நாடக மாநில தலைமை வனப் பாதுகாவலர் கூறியிருப்பதையும் உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் உரிய அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் பாசனத்திற்காக அணைகளை கட்டுவது சட்டவிரோதம் ஆகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணைகள் கட்டப்பட்டால், அது தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் என்பதுடன், தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கையும் பாதிக்கும். இதற்கெல்லாம் மேலாக நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான செயலாகவும் இது அமைந்து விடும். இந்த ஒற்றை நடவடிக்கையால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

 “இக்கடிதம் மத்திய அமைச்சர் உமாபாரதியிடம் 21.03.2015 சனிக்கிழமை நேரில் ஒப்படைக்கப்பட்டது”.

 இப்பிரச்சனை தொடர்பாக மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் தொலைபேசியில் பேசிய உமாபாரதி “உங்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் அமர்ந்து விவாதிக்கலாம்’’ என்று உறுதியளித்தார்.

No comments:

Post a Comment