Thursday, 26 February 2015

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ஆனந்த விகடனில் மருத்துவர் ராமதாஸ்

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ஆனந்த விகடனில் மருத்துவர் ராமதாஸ் பேட்டி 


''காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும் என்பது இயற்கையின் நியதி; வரலாற்று விதி. அதுதான் இதுவரை நடந்துகொண்டிருக்கிறது; இனியும் நடக்கும். ஆனால், எது மாறினாலும் என்னைப் பற்றி கட்டமைக்கப்பட்ட தவறான சில அபிப்ராயங்கள் மட்டும் மாறவில்லை. அதை மாறவிடாமல் தடுப்பது சில ஊடகங்கள்தான். அவை என்னைப் பற்றி தவறான பிரசாரங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. சரி... பேட்டி எனக் கேட்கிறீர்கள். என் விளக்கத்தைச் சொல்ல இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்'' - கொஞ்சம் கோபம், நிறைய ஆதங்கத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் தயாராகிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.
கேள்வி: ''உங்களுக்கு எதிராக ஊடகங்கள் வைக்கும் தவறான அபிப்ராயங்கள் என எதைச் சொல்கிறீர்கள்?''
பதில்: ''வன்னியர்கள் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் விழுந்த மரங்களை நான் வெட்டியதாக இன்னும் சொல்கிறார்கள். ஆனால், அப்போது அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களைப் பற்றி இவர்கள் எதுவும் பேசுவது இல்லை. 'நான் மரம் நட்டால், வெட்டியதற்குப் பிராயச்சித்தமாக நடுகிறீர்களா?’ என்கிறார்கள். ஜாதி, தேர்தல் கூட்டணி, வாரிசு அரசியல் என எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு ஒரு பார்வையையும்... எங்களுக்கு என ஒரு பார்வையையும் இந்த ஊடகங்கள் முன்வைக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மரக்காணத்தில் ஒரு கலவரம் நடைபெற்றது. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அதற்குக் காரணம் நான்தான் என்று அவர்கள் இன்னமும் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கின்றனர். தலித் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள்போல தொடர்ந்து சித்திரிக்கிறார்கள்.''
கேள்வி: ''ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், 'இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை’ எனச் சொல்கிறீர்கள். ஆனால், தேர்தல் சமயத்தில் அந்த நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்கிறீர்களே... ஏன்?''
பதில்: ''தேர்தல் சமயத்தில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்காக, நான் தமிழ்நாட்டு மக்களிடம் பல முறை மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இப்படி ஒரு கேள்வி எழக் கூடாது, இதுபோன்ற விமர்சனம் வரக் கூடாது என்பதற்காகத்தான், எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை இப்போதே அறிவித்துவிட்டோம். நாங்கள் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள் என்ற வாதத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கத்தான் இந்த முடிவு.''
கேள்வி: '' 'கூட்டணியில் இருக்கும்போதே அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது கூட்டணி தர்மத்தை மீறிய செயல்’ என்கிறதே பா.ஜ.க?''
பதில்: ''அரசியலில், கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்களுடைய அனுபவத்தில் இதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோதெல்லாம், நாங்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் எதிர் அணி கட்சிக்கு வாக்களித்தார்கள். அதற்குக் காரணம், எங்கள் வளர்ச்சி அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது. குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் அதே தொகுதியைக் கேட்போம் என்பதற்காக, இப்படி உள்ளடி வேலைகளைச் செய்தார்கள். அதனால்தான் கூட்டணி தர்மம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு எரிச்சல் வரும். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைக்கும்போதுதான், கூட்டணி தர்மம் என்ற ஒன்று நிலைநிறுத்தப்படும். அதற்காக உருவாக்கப்பட்ட அறிக்கையில் ஒவ்வொரு கட்சியும் கையெழுத்துப்போட வேண்டும். வட இந்தியாவில் அந்த நடைமுறை உள்ளது. தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலை இதுவரை இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அப்படி ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாகவில்லை. 'நீ ஒரு தொகுதியில் நிற்கிறாய்... அங்கு நான் உன்னை ஆதரிக்கிறேன். நான் ஒரு தொகுதியில் நிற்கிறேன். அங்கு நீ என்னை ஆதரி’ என்ற அடிப்படையிலான தொகுதி உடன்பாடு அது. தேர்தலுக்குப் பின் நீ யாரோ... நான் யாரோதான்.''
கேள்வி: ''அப்படியானால் பா.ஜ.க., பா.ம.க-வுக்கு உள்ள கூட்டணி முறிந்துவிட்டதா?''
பதில்: ''மத்தியில் உள்ள பாரதிய ஜனதாவோடு எங்கள் கூட்டணி தொடர்கிறது. ஏனென்றால், வரும் ஐந்து வருடங்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கிறோம் எனச் சொல்லி, நாங்கள் குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அதனால், நாங்கள் தொடர்கிறோம். மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என நாங்கள் இதுவரை சொல்லவில்லை. ஆனால், மாநிலத்தில் எங்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு பாரதிய ஜனதா வந்தால், கூட்டணி தொடரலாம்!''
கேள்வி: ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் 'இடைத்தேர்தல் அவசியமற்றது’ என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்களே?''
பதில்: ''பெண்ணாகரம் இடைத்தேர்தலில் இருந்து இதை நான் வலியுறுத்திவருகிறேன். இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டால், அங்கு ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சிக்கே, அந்தத் தொகுதியைக் கொடுத்துவிடலாம். ஏனென்றால், இடைத்தேர்தலின்போது அந்தத் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சி விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறது. ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் தொகை ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. திருமங்கலத்தில் 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. இப்போது திருவரங்கத்தில் அது 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் தேர்தலா? டெல்லியிலும்தான் தேர்தல் நடைபெற்றது. யாராவது ஒரு பைசா கொடுத்தார்களா? இல்லையே!''
கேள்வி: ''முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தை எப்படிப் பார்க்கீறீர்கள்?''
பதில்: ''தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்கு ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். அவர் தவறு செய்தபோதும் முதலமைச்சராக இருந்தார்; தண்டிக்கப்பட்டபோதும் முதலமைச்சராக இருந்தார். இது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தலைக்குனிவு. 1991-1996-ல் செய்தது ஊழல். 2001-2006 காலகட்டத்தில் செய்தது ஊழலோ ஊழல். அதன் பிறகு, 2011 முதல் தற்போதைய அ.தி.மு.க அரசில் நடப்பது இமாலய ஊழல். அ.தி.மு.க-காரன்தான் தங்கள் கட்சித் தலைவியை மீட்டுக் கொண்டுவர மண்சோறு சாப்பிடுகிறான்; பால் அபிஷேகம் பண்ணுகிறான்; நெய் ஊற்றுகிறான்; இந்த அபத்தங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டிய சில ஊடகங்களும் மௌனமாக இருப்பது வேதனை. நாட்டில் ஊழல்... சிறைக்குப்போன முதலமைச்சர்... வளர்ச்சி இல்லாத மாநிலம்... இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன். இதுதான் அவரது சாதனை.''
கேள்வி: ''கவர்னரிடம் கொடுத்த புகாரில் முக்கியமான ஊழல்களாக நீங்கள் எதைப் பட்டியலிட்டுள்ளீர்கள்?''
பதில்: ''தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக கவர்னரிடம் மொத்தம் 209 பக்க ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். விசாரணை என வரும்போது, அதை நாங்கள் விசாரணை அமைப்பிடம் தாக்கல் செய்வோம். தாதுமணல் கொள்ளையில் நடந்த ஊழல், கிரானைட் கொள்ளையில் நடைபெற்றுள்ள ஊழல், ஆற்று மணல் அள்ளுவதில் நடைபெற்றுள்ள ஊழல்... என வரிசையாகச் சொல்லலாம். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட மிகப் பெரிய ஊழல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. இந்தத் தொகை சரியாக தமிழகத்தின் அரசு கஜானாவுக்கு வந்திருந்தால், பட்டிதொட்டியெங்கும் இன்பம் கொட்டிக்கிடந்திருக்கும்!''
கேள்வி: ''தமிழகத்தில் தற்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?''
பதில்: ''விவசாயத் துறையில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சிதான், தமிழக அரசுக்கு நான் கொடுக்கும் மதிப்பெண்கள். அந்தவகையில், விவசாயத் துறையின் வளர்ச்சி மைனஸ் 12. அதையே தமிழக அரசுக்கும் நான் கொடுக்கிறேன்.''
கேள்வி: ''முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி?''
பதில்: ''பன்னீர்செல்வம் எங்கு செயல்படுகிறார்? 'தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை. அம்மாதான் ஆட்சி செய்கிறார்’ என அவரே சொல்கிறார். தஞ்சாவூர் பொம்மைகூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆடும். ஆனால், இந்தப் பொம்மை அதைக்கூட செய்ய மாட்டேன் என்கிறது!''
கேள்வி: '' 'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ எனச் சொல்லும், நீங்கள் தேசியக் கட்சிகளுடன் கூட்டணியில் தொடர்கிறீர்கள்... அவற்றைவிட திராவிடக் கட்சிகள் ஆபத்தா?''
பதில்: ''தேசியக் கட்சிகளைவிட தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நிச்சயம் ஆபத்தான கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளும் 48 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆண்டு, தமிழ்நாட்டைச் சீரழித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும். வேரோடும் வேரடி மண்ணோடும் இந்தக் கட்சிகளை வீழ்த்த வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும், நாட்டிலேயே இனி இருக்கக் கூடாது.''
கேள்வி: ''கூட்டணி இருந்தாலும் இல்லையென்றாலும் மற்ற கட்சித் தலைவர்களுடன் இணக்கமான ஒரு போக்கு உங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டியும் கருணாநிதியுடன் நல்ல உறவைப் பேணுகிறீர்கள்? ஆனால், விஜயகாந்த் விவகாரத்தில் அப்படி நீங்கள் இல்லையே?''
பதில்: ''என்னைப் பொறுத்தவரையில் நான் எல்லாத் தலைவர்களையும் மதிக்கிறேன். கலைஞர் ஒரு மூத்த தலைவர். எந்தப் பிரச்னை என்றாலும், என்னால் அவரோடு உடனே பேச முடியும். அதனால்தான் அரசியல் முரண்பாடுகளைத் தாண்டியும் என் பேரன் பேத்தி திருமணத்துக்கு நான் அழைத்தேன். அவரும் வந்திருந்து வாழ்த்தினார். ஆனால், விஜயகாந்தைப் பொறுத்தவரை இதுவரை நான் அவரைச் சந்தித்ததும் இல்லை; பழகியதும் இல்லை. அவ்வளவுதான். அதனால் நீங்கள் சொல்வதுபோல் அவருடன் எந்த வெறுப்பும் இல்லை. விஜயகாந்துடன் மட்டும் அல்ல... வேறு எந்தக் கட்சித் தலைவருடனும் எனக்கு வெறுப்பு இல்லை... விருப்பு உண்டு!''

No comments:

Post a Comment

பதிவுகளை தொடர