Monday 23 March 2015

மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி பாமக போராட்டம்

காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதை எதிர்த்து இன்று 23.03.2015 சென்னையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி, அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறி விடும். இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினை. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது.
உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. உடனே ஒரு மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டும். இதை செய்யாத தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
அவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. பெங்களூர் வழக்கில் மூழ்கி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல் காரணங்களால் எல்லா கட்சிகளும் ஒன்றுபடுவதில்லை.
இந்த கலாசாரம் மாற வேண்டும். இதில் கவுரவம் பார்க்க கூடாது. வருகிற 28–ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழக மக்களும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 2016–ல் பா.ம.க. ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. அப்போது அரசியலிலும், அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்....

No comments:

Post a Comment