Monday 16 March 2015

பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கும் 2015 -2016 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை


                                முழு அறிக்கையை காண இங்கே சொடுக்கவும்
முக்கிய அம்சங்கள்

1. 2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ.2,78,656 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1,02,605 கோடி அதிகம் ஆகும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.85,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.2,78,756 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,40,705 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.40,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.
3. 2015-16 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.1,871 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.100 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். மூலதனக் கணக்கில் ரூ.38,051 கோடி செலவிடப்படும்.
4. தமிழ்நாட்டில் கல்வி, வாழ்க்கை நிலை ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தருமபுரி, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, வேலூர், கிருட்டிணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத்திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 371 ஆவது பிரிவில் ரி என்ற உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இந்த சிறப்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.
5. ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
6. ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
* லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.
* முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர்.
* ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
* ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.
7. பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
8. தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தேர்தலில் நல்லவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு ‘‘கண்ணியமான தேர்தல்’’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்.
9. தமிழக அரசின் ஆண்டுத்திட்டம் ரூ. 48,815 கோடியாக இருக்கும்; இதில் வேளாண்துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் ரூ.13,688 கோடி.
10. தமிழக அரசின் நேரடிக்கடன் சுமையும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையும் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்தக் கடன்சுமையை 5 ஆண்டுகளில் போக்குவதற்கான சிறப்புத்திட்டத்தை பா.ம.க. வகுத்திருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
* தமிழக அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை அரசே நடத்துவது மற்றும் போட்டி ஏலமுறையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
* தாது மணல் குவாரிகளை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
* ஆற்று மணல் விற்பனை முறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* வணிக வரி வசூலில் காணப்படும் குறைகள் களையப்பட்டு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மேற்குறிப்பிட்ட 4 வகை நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,05,000 கோடி வருவாய் கிடைக்கும். முழுமையான மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படுவதால் அரசின் வருவாய் ரூ.20,000 கோடி அளவுக்கு குறையும். இதைக் கருத்தில் கொண்டால், தமிழக அரசுக்கு ரூ. 85,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அரசின் கடனை அடைக்க செலவிடப்படும்.
11. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.
12. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தமிழக காவல்துரையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.
13. பத்துக்கும் அதிகமான சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்.
14. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 84.68 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.
15. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும்.
16. 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் 01.01.2016 முதல் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 30% கூடுதலாக சேர்த்து வழங்கப்படும்.
17. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
18. விவசாயத்திற்குத் தேவையான அனைத்து இடுபொருட்களும் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
19. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் வளத்தை பெருக்கும் நோக்குடன் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
20. காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் வாயுவை வெட்டி எடுக்கும் திட்டத்திற்கும், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது.
21. எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 42&ம், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.32-ம் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.
22. இலங்கைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்படவுள்ளன. அப்படகுகள் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவுடன், அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான முழுத் தொகையையும் அரசே மானியமாக வழங்கும்.
23. மேகதாது அணை திட்டத்தை தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தங்களும் தரப்படும்.
24. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
25. தொழில்துறை வளர்ச்சி விகிதத்தை மைனஸ் - 1.30 விழுக்காடு என்ற எதிர்மறை நிலையிலிருந்து மீட்டு, நேர்மறை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
26. தமிழகத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு அதன் ஒப்பந்ததாரர்களே பொறுப்பேற்க வேண்டும். சாலைகள் தரம் குறைவாக இருந்து, சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.
27. மகாமகத் திருவிழாவையொட்டி கும்பகோணத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதிஒதுக்கீடு.
28. பேரூந்துகளில் எரிபொருள் சிக்கனம், சிறப்பான பராமரிப்பு, நிர்வாக சீர்திருத்தம், வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அரசுப் போக்குவரக்கழகங்கள் இலாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும்.
29. சாதாரண பேரூந்துகளில் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும், சொகுசு பேரூந்துகள் மற்றும் குளிரூட்டி வசதி கொண்ட பேரூந்துகளில் 8 பைசாவும் கட்டணம் குறைக்கப்படும்.
30. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை சுமார் 60% வரை குறைக்க நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
31. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ. நீளப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்படும்.
32. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவை கோயம்பேடு வரை விரிவுபடுத்தப்படும்.
33. சென்னையில் களங்கரை விளக்கம் முதல், சாத்தியமாகக்கூடிய தொலைவுவரை கடலில் படகுப் போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.
34. தமிழகத்தில் நிலுவையிலுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வசதியாக, அத்திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.
35. தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டை போக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* அடுத்த 3 ஆண்டுகளில் 11,960 மெகாவாட் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* பெரிய தொழிற்சாலைகள், மாநகரங்கள், நகரங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்தான் முதன்மை மின்தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படவேண்டும்.
* ஊரகப் பகுதிகளில் சிறிய அளவிலான மின்திட்டங்களை செயல்படுத்தி, அவற்றில் இருந்து அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக மின்சாரம் வழங்க வேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மின் தேவையில் 50 விழுக்காடு சூரியஒளி மின்திட்டம் மூலம் பெறப்படவேண்டும்.
* காற்றாலைகளை மாற்றி அதிக மின்சாரம் உற்பத்தி செய்தல்(Re-Powering), கலப்பின மின் உற்பத்தி தொழில்நுட்பம் (Hybrid Technology) ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திச் செய்யப்படும்.
36. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் மின்வாரியத்தின் வருவாயைப் பெருக்கி லாபத்தில் இயங்கும் நிலை உருவாக்கப்படும்.
37. மின்வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் மின்வாரியத்தின் கடன் படிப்படியாக அடைக்கப்படும்.
38. ஊடக நிகழ்ச்சிகளில் பிற மொழிகள் வலிந்து கலக்கப்படுவது தண்டத்திற்குரிய குற்றமாக்கப்படும்.
39. மழலை வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி முறை கட்டாயமாக்கப்படும். பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தமிழ்வழிக் கல்விமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் கட்டாயமாக்கப்படும்.
40. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயைத் தடுக்க சுகாதாரம் பேணப்படுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
41. சுகாதாரம் மற்றும் துப்புரவை பராமரிப்பதற்கான அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
42. தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 2015-&2016 ஆம் ஆண்டில் 1,750 ஆக உயர்த்தப்படும்.
43. பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும். சிகிச்சைத் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
44. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வாரத்திற்கு இரண்டு பாடவேளை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.
45. பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் மரபு சார்ந்த தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும்.
46. தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அந்தந்த பகுதியில் பயிலும் மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப கற்றல்&கற்பித்தல் முறைகள் அமைய வழிவகை செய்யப்படும்.
47. பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
48. கல்விக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
49. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிக்கான இருக்கைகள் தொடங்கப்படும்.
50. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73 ஆவது திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். 29 துறைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
51. தமிழகம் வேகமாக நகர்ப்புற மயமாகி வருகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 48.45% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டுமானால் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 74 ஆவது திருத்தத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
52. நகர்ப்புற நிர்வாக முறையின் (Urban Governance) அனைத்து முக்கிய அம்சங்களும் நகராட்சி நிர்வாகத்தின் அங்கங்களாக்கப்படும்.
53. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய தண்ணீர் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.
54. தண்ணீர் உரிமைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு குடிநீருக்காக எவரும் ஒரு காசு கூட செலவிடத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
55. எவரேனும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உருவானால், அதை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் குடிநீருக்காக செலவிட்டதைப் போன்று 10 மடங்குத் தொகை அவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
56. தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
57. தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் ஊராட்சித் தலைவர், கிராமநிர்வாக அதிகாரி, காவல்நிலைய பொறுப்பு அதிகாரி ஆகியோர் பொறுப்பேற்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
58. அனைத்து மக்களின் பெயர் விவரம், வயது உள்ளிட்ட தகவல்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசே தானாக நிதியுதவி வழங்கும். இதற்காக, எவரும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை
59. தமிழ் அகதிகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதில் தமிழக அரசு அவசரம் காட்டாது. ஈழத்தமிழர்கள் விரும்பும் வரை அவர்கள் தமிழகத்தில் வாழ வகை செய்யப்படும்.
60. இராஜபக்சே உள்ளிட்ட இலங்கை இனப்படுகொலையாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டிப்பதற்கான தீர்மானத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவர வேண்டும்

No comments:

Post a Comment