Friday 13 March 2015

மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி..

மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
( Dr.Anbumani Ramadoss MP )

சட்டப்பேரவை தேர்தலுக்கு பாமக தயாராகிவிட்டதா?
பாமக பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித் துள்ளனர். 32 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன். இதுவரை 14 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தெளிவாகச் சொல்லியே மக்களை சந்திக்கிறோம். இலவசங்கள், மதுக் கொடுமை, சினிமா கலாச்சாரம் ஆகிய அடையாளங்களில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான திட்டங்களை தயாராக வைத்திருக் கிறோம்.
பாமக ஜாதி சார்புடைய கட்சி என்ற தோற்றம் உள்ள சூழலில் தமிழகத்தில் வெற்றி பெற முடியுமா?
பாமக ஜாதிக் கட்சியோ தலித் மக்களுக்கு எதிரான கட்சியோ அல்ல. இது தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் திட்டமிட்டு உருவாக்கி வரும் தோற்றம். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஊடகங்களும் இந்தத் தோற்றத்தை நம்புகின்றன. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தேன். இதனால் ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரம் தலித் மாணவர்கள் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கிறார்கள்.
தருமபுரி சம்பவத்தில் பாமகவை பலரும் குற்றம்சாட்டிய சூழலில், சிலரின் கருத்துகள் தலித்துகளுக்கு எதிராக இருந்ததே?
தருமபுரி காதல் விவகாரத்தைத் தொடர்ந்து அரங்கேறிய விரும்பத் தகாத சம்பவங்களில் பாமகவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் உண்மை. அதேசமயம், ஜாதி ரீதியில் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் வன்னிய சமுதாய பெண்களை காதலித்து ஏமாற்றி, அதை வைத்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பது உண்மை. இதைத்தான் ‘நாடகக் காதல்’ என்று கண்டித்தோம்.
வன்னியர் - தலித் பிரச்சினை என்பது தொடர்ந்துகொண்டே உள்ளதே?
தலித் மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள். வன்னியர் - தலித் பிரச்சினை ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததது எந்த அளவுக்கு பலன் தரும் என்று நினைக்கிறீர்கள்?
டெல்லியில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஆழமாக விரும்பியதால் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அதே மனநிலை தமிழகத்தில் 15 ஆண்டுகளாக உள்ளது. 45 சதவீதம் பொது வாக்காளர்கள், ஜெயலலிதா மீது கோபத்தில் உள்ளனர். திமுக மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். திமுக, அதிமுக வாக்கு வங்கி குறைந்துவருகிறது. மாற்றம் வேண்டும் என்று நினைத்து விஜயகாந்துக்கு 10 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். கூட்டணிக்கு சென்றதால், அவருடைய வாக்கு வங்கி போய்விட்டது. தருமபுரியில் மக்கள் என்னை நம்பினர். அதே போல தமிழகம் முழுவதும் மக்கள் என்னை நம்புவர்.
தென் தமிழகத்தில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
இது மாதிரியான கேள்விகள் சமீபகாலமாக வந்து கொண்டுள்ளன. இதை கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை பாமகவுக்கு 15 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்த நிறைய பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

No comments:

Post a Comment