Sunday 18 January 2015

ஜல்லிக்கட்டு: வரலாறும், பண்பாடும் -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

ஜல்லிக்கட்டு: வரலாறும், பண்பாடும் 
தெரியாமல் மேனகா பேசக் கூடாது
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு போட்டிகள் மேற்கத்திய கலாச்சாரம் என்றும், இப்போட்டிகளை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியாததால் தமிழக மக்கள் மனக்காயம் அடைந்துள்ள நிலையில், அதில் ஈட்டியைப் பாய்ச்சும் வகையில் பொய்யான கருத்தை மேனகா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
விலங்குகளின் உரிமைகளுக்காக போராடுபவர், நாய்கள் கொல்லப்படுவதை சட்டப்போராட்டம் நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வகையில், மேனகா காந்தி மீது எனக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்த வரலாறும் தெரியாமல், கலாச்சாரமும் புரியாமல் அவர் கருத்து தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது, இப்படிப்பட்ட ஒருவரையா இந்தியா அமைச்சராகப் பெற்றிருக்கிறது? என்ற சலிப்பு தான் ஏற்படுகிறது. மேனகா கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது ஜல்லிக்கட்டு போட்டி குறித்த அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லை என்பதை உணர முடிகிறது.


ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், மெக்சிகோ போன்ற நாடுகளில் நடத்தப்படும் காளைச் சண்டையும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் ஒரே மாதிரியானவை என்ற எண்ணத்தில் தான் மேனகா காந்தி தவறான விமர்சனத்தைக் கொட்டியிருக்கிறார். ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் நடத்தப்படும் காளைச் சண்டை போட்டியிலிருந்து ஜல்லிக்கட்டு முற்றிலும் மாறுபட்டதாகும். காளைச் சண்டை போட்டி காளைகளை ஏமாற்றி படுகொலை செய்யும் நோக்கம் கொண்டதாகும். ஸ்பெயினில் கடந்த ஆண்டு காளைச்சண்டை போட்டியில் 40,000 காளைகள் கொல்லப்பட்டதிலிருந்தே இதை உணரலாம். ஆனால், தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி காளைகளின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசுப் பொருட்களை மீட்டெடுத்து வீரத்தை நிரூபிப்பதை நோக்கமாக கொண்டது.
காளைச் சண்டையில் பங்கேற்கும் வீரர்கள் கத்தி மற்றும் குத்தீட்டியுடன் தான் களமிறங்குவார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்க வரும் இளைஞர்கள், வெறும் கைகளுடன் வீரத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்குவர். காளைச் சண்டைக்கும், ஜல்லிக்கட்டுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் நிலையில், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் குரூரத்தை அடிப்படையாகக் கொண்ட மேல்நாட்டு கலாச்சாரமான காளைச்சண்டையை பின்பற்றி தான் வீரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜல்லிக்கட்டு உருவாக்கப்பட்டது என்று கூறியதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், வீரத்தையும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கொச்சைப் படுத்தியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கக்கூடிய காளைகள், பசுக்கள் மட்டுமின்றி, மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள் என்ற மேனகா காந்தியின் குற்றச்சாற்று அவரது அறியாமை மற்றும் அபத்தத்தின் உச்சமாகும். அறுவடைத் திருநாளான பொங்கல் நாள் மரங்களையும், செடிகளையும் வணங்கி கொண்டாடப்பட வேண்டும்; ஆனால், தமிழர்கள் காளைகளைக் கொடுமைப் படுத்தி கொண்டாடுகிறார்கள் என்ற மேனகா காந்தியின் கருத்தும் அறியாமையின் வெளிப்பாடே. பொங்கல் திருநாளின் நோக்கமே விவசாயத்திற்கு உதவிய சக்திகளுக்கு நன்றி தெரிவிப்பது தான். அதன்படி பொங்கல் அன்று இயற்கையை வணங்கும் தமிழர்கள், அதற்கு அடுத்த நாள் மாடுகளுக்கு தனியாக மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் விழா எடுக்கிறார்கள். ஜல்லிக்கட்டு கூட காளைகளின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கானது தானே தவிர, அவற்றை கொடுமைப்படுத்துவதற்கானது அல்ல.

இந்த உண்மைகளையெல்லாம் உணராமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுவதை மேனகா காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டி பற்றி அடுத்த முறை கருத்து கூறுவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு குறித்த வரலாற்றையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை பாரதிய ஜனதா எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ள நிலையில், அதை பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்கிறதா? என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment