Sunday, 4 August 2013

இயக்குனர் சேரனுக்கு மருத்துவர் ஐயா ஆதரவு

ஐயா 
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ஐயா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன. ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தை என்ற வகையில் இந்த விசயத்தில் சேரனின் மனம் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது.
தமது காதலை எதிர்ப்பதாகவும், தனது காதலனை மிரட்டுவதாகவும் சேரன் மீது அவரது மகள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு நேர் நின்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேரன், ‘‘எனது மகளின் காதலை நான் முதலில் ஆதரித்தேன். ஆனால், ஒரு தகப்பன் என்ற முறையில் எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக்கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்?’’ என்று கேட்டிருக்கிறார். இந்த விசயத்தில் சேரனின் கேள்விகள் நியாயமானவை.
இது தவிர சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம்.
எங்களின் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறை கடைப்பிடித்து வரும் முதிர்ச்சியான அணுகுமுறையும் வரவேற்கத் தக்கது.
சேரனின் மகளும், அவரது காதலரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை அடைந்து விட்டவர்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பச்சைக் கொடி காட்டிவிடாமல், படிப்பை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் நிலை நிறுத்திக் கொண்ட பின்னர் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுரை கூறியிருப்பது பாராட்டத்தக்கது.
தருமபுரி இளவரசன் – திவ்யா காதல் நாடகத் திருமண விவகாரத்திலும் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இத்தகைய அணுகு முறையை கடைபிடித் திருந்தால், திவ்யாவின் தந்தை நாகராஜன் தேவையின்றி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், முற்போக்கு வாதிகள் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் சில பிற்போக்கு சக்திகள் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று கூறி படிக்கும் வயதில் காதல் செய்யும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கும், கலாச்சார சீரழிவுக்கும் மட்டுமே இத்தகைய பிரச்சாரங்கள் வழி வகுக்கும்.
இனி வரும் காலங்களிலாவது நல்லது, கெட்டது அறியாத வயதில் வரும் காதல் பிரச்சினைகளில் அனைத்து தரப்பினரும் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அப்பாவி பெற்றோர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும்.
பதின்வயதில் வயதில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக ஏற்படும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண் களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரங்கள் மற்றும் கொந்தளிப்புகள் குறித்து ஒரு வழக்கில் விரிவாக விளக்கியுள்ள கர்நாடக உயர்நீதி மன்றம், இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் வழங்கியுள்ளது.
21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது அத்திரு மணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் இல்லா விட்டால் அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்து செய்யத் தகுந்தவை என அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந் துரைத்திருக்கிறது.
21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யும்போது அதற்கு பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, 21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பதிவுகளை தொடர