Monday 12 August 2013

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்வீர்!


தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்வீர்! 

தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன் கலந்து கொண்டார். ஆணையக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவர் முன்வைத்த கருத்துக்கள் வருமாறு:

இலவசங்கள் வழங்கப்படுவதை எதிர்த்தும், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் வழங்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி தீர்ப்பு வெளியான 5 வாரங்களில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்துவது பாராட்டத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை கடுமையாக எதிர்க்கிறது. மக்களின் வாழ்வாதாரங்களையும், மனித வளத்தையும் மேம்படுத்தக்கூடிய இலவசங்களை ஆதரிக்கிறது. மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் பயனளிக்கும் முதலீடாக அமைய வேண்டுமே தவிர, அரசின் கஜானாவை காலி செய்து, மக்களின் வாக்குகளை கவர்வதற்கான தூண்டிலாக இருக்கக்கூடாது என்பது தான் எங்களின் கருத்து ஆகும்.

தமிழகம் & புதுச்சேரி

உதாரணமாக எங்களது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நிலவும் நிலைமை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவிலேயே தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தான் இலவசங்கள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 2006&ஆம் ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும்; வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி, இரண்டு ஏக்கர் விளைநிலம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்’’ என்று ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் பிரச்சாரம் செய்த தற்போதைய மத்திய நிதி அமைச்சர், அந்தத் தேர்தலில் அத்தேர்தல் அறிக்கை தான் கதாநாயகி என்றும், அதுவே வெற்றியை ஈட்டித் தந்து விடும் என்றும் கூறினார். அதைப்போலவே அந்தத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது.

அடுத்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இன்னொரு கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்,‘‘ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 கிலோ அரிசி, ஒரு மின் விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவையும், மாணவர்களுக்கு மடி கணிணியும் இலவசமாக வழங்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே அத்தேர்தலில் அக்கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தான். 
இதனால், ஒரு கட்சியை அதன் கொள்கைகளின் அடிப்படையிலும், அதன் ஆட்சித்திறனின் அடிப்படையிலும் மதிப்பிடுவதற்கு பதிலாக, இலவசங்களின் அடிப்படையில் தீர்மானிக்கும் நிலை ஏற்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதைத்தான்,‘‘இலவசங்களை வழங்குவது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுதந்திரமான மற்றும் நேர்மையானதேர்தல் என்ற தத்துவத்தின் ஆணி வேரையே இது பெரிய அளவில் ஆட்டிப்பார்க்கிறது என்று உச்சநீதிமன்றம் விமர்சித்திருந்தது.

அரசுகளின் சார்பில் வழங்கப்படும் இலவசங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ அல்லது பொருளாதார நிலையையோ உயர்த்துகிறதா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டங்கள் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்குமானால், இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையிலோ இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.

இலவசங்களின் தீமைகள்

நடப்பாண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக மட்டும் ரூ.45,176 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் சுமார் 40% ஆகும். தமிழக அரசு வழங்கும் மானியங்களில் ஒருசில அவசியமானவை என்ற போதிலும், பெரும்பாலானவை மக்களை சோம்பேறிகளாக்குபவை ஆகும். இவற்றில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சில உதவிகளைத் தவிர மற்ற எவற்றையும் முதலீடாகவே கருத முடியாது. தமிழக அரசின் கடன் சுமை நடப்பாண்டின் இறுதியில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 129 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் எந்த ஒரு பயனும் இல்லாமல் ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடியை மானியத்திற்காகவும், இலவசங்களுக்காகவும் செலவிட்டால் அது மாநிலத்தின் நிதிநிலையையும், பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் இலவசங்களுக்காக செலவிட மாநில அரசுகளிடம் நிதி இருப்பதில்லை. எனவே, இலவசத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக மது விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்தில் மது விற்பனை அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.23 ஆயிரம் கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது மக்களின் உடல்நலனில் வேறு விதமான விளைவுக¬ளை ஏற்படுத்துகின்றன.
நல்ல திட்டங்களுக்கு இலக்கணம்
அரசின் திட்டங்கள் மக்களின் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருவாயை பெருக்கி, வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். இதற்காக அனைவருக்கும் தரமான கல்வியை இலவசமாகவும், கட்டாயமாகவும் கொடுத்து வேலைவாய்ப்பை பெறும் தகுதியை வளர்க்க வேண்டும். 

இரண்டாவதாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் தரமான மருத்துவத்தை அவர்கள் வாழும் பகுதியிலே வழங்க வேண்டும். மூன்றாவதாக, நாட்டின் ஆதாரத் தொழிலான விவசாயத்தை லாபகரமானதாக மாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அரசின் செலவுகள் எனப்படுபவை கட்டமைப்புகளையும், சொத்துக்களையும் உருவாக்குவதற்காக இருக்க வேண்டுமே தவிர, வீணான செலவினங்களாக இருக்கக் கூடாது என்று இந்திய அரசியல் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பசியால் வாடும் ஒருவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிப்பதற்கு கற்றுத்தர வேண்டும் என்பது சீன பழமொழி ஆகும். அதன்படி இந்தியாவையும், தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் ஆளும் அரசுகள், ஏழை மக்களுக்கு இலவசங்களை வழங்கி அவர்களை சோம்பேறிகளாக்குவதைவிட, வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் தங்களின் சொந்தக்கால்களில் நிற்க வகை செய்வது தான் சிறப்பானதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகள் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்படி தேர்தல் ஆணையத்தை பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment