Saturday 3 August 2013

பள்ளிகளுக்கு சேவை வரி விதிப்பைக் கைவிட வேண்டும் மருத்துவர் ஐயா அறிக்கை.



பள்ளிகளுக்கு சேவை வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5500 பள்ளிகளுக்கும், ஏராளமான கல்லூரிகளுக்கும் சேவை வரி செலுத்தும்படி கலால் மற்றும் சுங்கத்துறை அறிவிக்கை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வி தவிர்த்த பிற சேவைகள் அனைத்துக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே, கல்விச் சேவைகள் மீதான வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு அதன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் போக்குவரத்து வசதி, மாணவர் விடுதிகள், தேனீர் மற்றும் சிற்றுண்டி வசதி, நுழைவுத் தேர்வு பயிற்சி, யோகா வகுப்புகள், சிறப்புப் பயிற்சி வகுப்புகள், கணிணி பயிற்சி ஆகிய சேவைகளுக்கு 12.36 விழுக்காடு வீதம் சேவைவரி செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு நெருக்கடி அளித்துவருகிறது.

தரமான கல்வியை வழங்க முடியாமல் கல்வித் துறையை தனியாரிடம் தாரை வார்த்து கல்விக் கொள்ளை நடப்பதற்கு துணை போன மத்திய அரசு இப்போது கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு சேவைவரி விதித்திருப்பது ‘குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்’ என்ற கதையாக உள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. போக்குவரத்து வசதி, உணவகம், தனிப்பயிற்சி வகுப்பு ஆகியவை அத்தியாவசிய சேவை இல்லை என்றும், இவை வணிக நோக்கம் கொண்டவை என்றும் கூறி இந்த வரிவிதிப்பை நியாயப்படுத்த மத்திய அரசு முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அரசு கூறுவதை போல இவை வணிக நோக்கம் கொண்டவை என்றே வைத்துக் கொண்டாலும், இவற்றுக்கு சேவை வரி விதிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தானே தவிர, பள்ளி நிர்வாகங்கள் அல்ல. ஏற்கனவே கல்வியை வணிகமாக்கி கொள்ளையடித்து வரும் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் இந்த சேவைவரியை தங்களது கையிலிருந்து ஒருபோதும் கட்ட மாட்டார்கள். இந்த வரியையும் மாணவர்கள் தலையில் தான் சுமத்துவார்கள்.

இதனால், ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் நடக்கும் கல்விக் கொள்ளையை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி சம்பந்தமான எந்த சேவைக்கும் வரி விதிக்க உரிமை இல்லை. இந்த வரிவிதிப்பால் மாணவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment