Thursday 1 August 2013

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் அறிக்கை

"பா.ம.க.வின் போராட்டத்தால் மதுக்கடைகளுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை: இருபது கோடி ரூபாயை பா.ம.க. தர வேண்டும் என்று தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்!" 

- தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் அறிக்கை

"பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும், அன்புமணி இராமதாசு அவர்களும் கைது செய்யப்பட்டதை ஒட்டி பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும் நடத்திய போராட்டத்தால் – தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இருபது கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அத்தொகையைப் பா.ம.க.வும் வன்னியர் சங்கமும் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது. 

பா.ம.க.வினரின் போராட்டத்தினால், விற்பனையாளர்கள் முழுநேரம் மதுக்கடைகளைத் திறந்து வைக்க முடியவில்லை, குடிக்க வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தமிழக அரசு காரணம் கூறுகிறது. 

தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும், சனநாயக உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையும் ஆகும். 

பா.ம.க.வுக்குத்தானே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மற்ற கட்சிகளும் சனநாயக சக்திகளும் இதில் ஒதுங்கி இருக்க முடியாது. இதில் தமிழக அரசின் சனநாயக மறுப்பு நிலைநாட்டப்பட்டு விட்டால், இதே பழிவாங்கல் நடவடிக்கை மற்ற அமைப்புகள் மீதும் பாயும். 

பொதுச் சொத்துகள் சேதச் சட்டம்கூட, சேதமாக்கப்பட்ட பொருட்களுக்குத்தான் நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென சொல்கிறதே தவிர, விற்பனையாகாத பொருட்களுக்கெல்லாம் அச்சட்டத்தின்படி இழப்பீடு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால், தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட இழப்பு என்று கூறி தமிழக அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு கோரும் நிலை உருவாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சனநாயகப் பறிப்பாக இச்செயல் உள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை தவறானது; கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அரசின் இந்த முடிவை மறு ஆய்வு செய்து, மதுக்கடைகளுக்கு பா.ம.க. இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." 

- பெ.மணியரசன்

No comments:

Post a Comment