Thursday, 27 June 2013

ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறை, ஹிட்லர்,ராஜபக்ஷே வரிசையில் ஜெயலலிதா.

1987 ஆம் ஆண்டின் சாலை மறியல் போராட்டத்திற்கு பின்னர், மீண்டும் வன்னியர்கள் மீது ஒரு கடும் நெருக்கடியைத் திணிக்கும் சதிகள் அரங்கேறி வருகின்றன. நீதி கேட்ட குற்றத்திற்காக மருத்துவர் அய்யா அவர்களை கொடும் சிறையில் அடைத்து மன்னிக்கவே முடியாத குற்றத்தை இழைத்துள்ளது ஜெ.அரசு.


வரிசையாக வழக்குகள், தேசியப் பாதுகாப்புச் சட்டம் என அடக்குமுறைகள் தொடரும் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் அடக்குமுறைகள் மூலம் எந்த ஒரு இனத்தையும் ஒடுக்கிவிட முடியாது என்பதுதான் வரலாற்று உண்மை.

அறுபது இலட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்றொழித்தான். ஆனால் இன்றைய உலகில் 1 கோடியே 30 இலட்சம் யூதர்கள் ஒரு சக்திமிக்க இனமாக வாழ்ந்து வருகின்றனர். ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இராஜபக்சே கொன்றொழித்தான். அதனால் 30 இலட்சம் பேரைக் கொண்ட ஈழத்தமிழ் இனம் அழிந்து போய்விடவில்லை. 

எந்த ஒரு இனத்திற்கு எதிரான அடக்குமுறையும், அந்த இனத்தினரை வீறுகொண்டு எழவைக்கும் என்பது தான் இயற்கை கற்றுக்கொடுத்துள்ள பாடம்.

ஈழத் தமிழர்களை விடவும், உலகின் ஒட்டுமொத்த யூத இனத்தை விடவும் அதிக மக்கள் தொகைக் கொண்ட ஒரு இனம் வன்னியப் பேரினம் ஆகும். இந்த இனத்தின் எழுச்சியை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் ஜெ. இது ஒரு போதும் சாத்தியமாகக் கூடியது இல்லை.

மருத்துவர் அய்யா அவர்களின் 12 நாள் கொடுஞ்சிறைவாசம் வீணாய்ப் போகாது. எல்லா வன்னியர்களும் ஓரணியில் திரளும் காலம் வெகு விரைவில் வரும். அது அடக்குமுறை ஆட்சியாளர்களை தூக்கி எறிவதாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உண்மையான விடுதலைக்கும் வழிவகுக்கும். தமிழ்நாட்டின் எல்லா மக்களுக்குமான, ஒரு நீதியான, நியாயமான அரசு அமையும் காலத்தை நோக்கி தமிழ்நாடு விரைவாக பயணிக்கிறது என்பதையே அண்மை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

மாற்றத்தைக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர் அய்யா அவர்களின் தியாகத்தையும், உழைப்பையும், பல அரிய சாதனைகளையும் முறியடிக்க வன்னியர்களின் எதிரிகள் மேற்கொள்ளும் ஒரே ஒரு நடவடிக்கை – நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதுதான்.

அதாவது, மருத்துவர் அய்யா அவர்களும், அவரைப் பின்பற்றும் தொண்டர்களும் “சாதி வெறியர்கள்“, “வன்முறையாளர்கள்” என்கிற ஒரு கட்டுக்கதையை உருவாக்கி, அதனை வெற்றிகரமான “கோயபல்ஸ்” பிரச்சாரமாகவும் அரங்கேற்றி வருகின்றனர். இந்தக் கட்டுக்கதை நமது உழைப்பை வீணாக்குவது மட்டுமல்லாமல், ஒரு இனத்தையே குற்றப் பரம்பரையினராகவும் அடையாளப்படுத்துகிறது.

எனவே “நற்பெயருக்கு களங்கம்” என்பது மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக மட்டுமல்ல – அது ஒட்டுமொத்த வன்னியப் பேரினத்துக்கு எதிரானதாக கட்டமைக்கப்படுகிறது. இதனை முறியடிப்பதே இப்போதைய தேவை ஆகும். 

மருத்துவர் அய்யா அவர்களை 12 நாட்கள் சிறையில் அடைத்து, பல வன்னியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், பொய் வழக்குகளிலும் ஜெ.அரசு உள்ளே தள்ளிவரும் நிலையில், ஒட்டுமொத்த வன்னிய இனமும் ஓர் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய சுதந்திரப் போராட்டம் வன்னியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஒரு புதிய விடியலைத் தரக்கூடியதாக அமையும் என்று உறுதியாக நம்பலாம். இப்போது இருக்கும் ஆட்சியாளர்களை தூக்கி எறிவதும், அந்த இடத்தை வன்னியர்களின் தலைமையிலான அணியினர் பிடிப்பதுதான் தமிழ்நாட்டின் விடிவிற்கு ஒரே வழியாகும்.

விரும்பியோ, விரும்பாமலோ நாம் வெற்றியை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம். ஆனால் நிற்காமலும், தொய்வில்லாமலும் ஒரு மராத்தான் வீரரைப் போன்று ஓடியாக வேண்டும் – தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 46 ஆண்டுகால அராஜக ஆட்சிப் போக்கை மாற்றி நல்லாட்சியை உருவாக்கும் நோக்கில் நிற்காமல் ஓடியே ஆக வேண்டும். வேறு வழி எதுவும் இல்லை.

புதிய சுதந்திரப் போராட்டம் எல்லா வன்னியர்களையும் அழைக்கிறது. இந்த நேரத்தில் மனித உழைப்பு, பணம், நேரம் என்கிற மூன்று வளங்களை திறம்பட பயன்படுத்தப்படுவதன் மூலமாக மட்டுமே வெற்றியை அடைய முடியும். இவற்றில் நேரம் எல்லோருக்கும் சமமானது. அதனை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மனித உழைப்பு – திறன் அடிப்படையில் குறைவாக இருப்பினும், எண்ணிக்கை அடிப்படையில் நம்மிடம் போதுமான அளவுக்கு உண்டு.

எனவே சரியான பாதையில், தொய்வில்லாது உழைப்பதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் அதற்காகக் திட்டமிடுவது ஒவ்வொரு வன்னியனின் கடமையாகும்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்றத் தடுப்புக் காவல் சட்டங்கள் வளர்ந்த நாடுகளில் கிடையாது. இந்தச் சட்டங்கள் அரசுக்கு எவரை வேண்டுமானாலும் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்து சிறையில் வைக்கும் ஒரு கொடுங்கோல் அதிகாரத்தைத் தருகின்றன. இந்தச் சட்டங்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானவை. கைது செய்யப்பட்ட நபர் 180 நாள் வரை எந்த விசாரணையும் இல்லாமேலே சிறை வைக்கப்படலாம். 

தேசியப் பாதுகாப்புக்கோ இல்லை ஒட்டு மொத்த நாட்டின் அமைதிக்கோ குந்தகம் விளைக்கும் ஒருவரை கைதுச் செய்து சிறையில் வைக்க இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் தேவை என்பதே அரசுகளின் வாதமாக இருக்கிறது.

ஆனால் இந்தச் சட்டங்கள் மிகப் பெரிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராகவும், குறிப்பாக அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். 

இப்படிப்பட்ட துஷ்பிரயோகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு. மருத்துவர் அய்யாவின் கைதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தியது தான். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட எந்தக் கொடுஞ்செயலிலும் ஈடுபடவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர்கள். 

தருமபுரி மாவட்டத்தில் மூக்கனூர்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 09.05.2013 அன்று காலைக் கைது செய்யப்பட்டார். அவர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தியின் ஓட்டுனர். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்திய இரவில் இரண்டு அவசர நோயாளிகளை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தியின் மூலம் கொண்டு சென்றுள்ளார். தன்னைக் கைது செய்யவந்தவர்களிடம் அவர், தான் பணி புரிந்ததற்கான ஆதாரங்களைக் காட்டியபோது அவர்கள் சென்னது “நீ வன்னியன் தானே? அப்படியானால் வா”. இப்படி மிகப்பெரிய அளவில் ஒரு அச்சுறுத்தும் நாடகத்தைச் ஜெயலலிதா தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கிறது. 

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சாதியைச் சேர்ந்த 122 பேர் மேல் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கொடுஞ் சட்டங்களைப் போட்டிருக்கிறது. 

வன்னியர் இளைஞர் சித்திரைத் திருவிழா குறித்து மரக்காணத்தில் நடந்த கலவரங்கள் குறித்து 29.04.2013 அன்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார். அந்த அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியையும், வன்னியர் சங்கத்தையும் கடுமையாகச் சாடினார்.

அதே போல மருத்துவர் அய்யா கைதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெற்ற அமைதிப் போராட்டங்கள் குறித்தும் 13.05.2013 அன்று சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். 

இந்த இரண்டு அறிக்கைகளின் மூலம் அவர் சொல்ல வரும் கருத்துக்கள்

பா.ம.க ஒரு வன்முறைக் கட்சி
பா.ம.க தொண்டர்கள் வன்முறையாளர்கள்
வன்னியர்கள் அநாகரிகமானவர்கள், பொறுப்பற்றவர்கள்
வன்னியர்கள் குடிகாரர்கள்

இந்த குற்றச் சாட்டுகள் எவ்வளவு அபத்தமானவை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இடஒதுக்கீடுப் போராட்டத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் என்பது மட்டுமல்ல சில இடங்களில் மரங்களும் சேதப்படுத்தப்பட்டன. ஆனால் எந்த சூழலிலும் இந்த மறியல்கள் பொதுமக்களைத் தாக்குகிற அல்லது பொதுமக்களின் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கிறப் போராட்டங்களாக இருந்தது கிடையாது.

30.05.2013 அன்று மருத்துவர் அய்யா கைது செய்யப்பட்ட பின்னரும் தமிழகமெங்கும் பா.ம.கவினர் அமைதி வழியிலேயே போராட்டம் செய்தனர். பெரும்பாலான கட்சிப் பொறுப்பாளர்கள் 30.04.2013, 01.05.2013 ஆகிய இரு நோட்களிலேயே கைது செய்யப்பட்டுவிட்டனர், ஆனால் பெரும்பாலான தாக்குதல்கள் 01.05.2013க்குப் பிறகே நடந்திருக்கின்றன. பல இடங்களில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை பா.ம.கவினர் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அப்படி ஒப்படைத்தவர்களை காவல்துறை கைது செய்யாமல் விடுவித்து விட்டு பா.ம.கவினர் மீதும், வன்னியர் சமூகத்தினர் மீதும் மட்டுமே வழக்குகள் பதிவு செய்து கைது செய்தது. 

பா.ம.க.வின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தியதோடு அல்லாமல் சட்டமன்றத்திலும் பா.ம.கவினர் மீது அபாண்டப் பழிகளைப் போட்டு அவதூறுச் சேற்றை வாரியிரைத்திருக்கிறார் ஜெயலலிதா.

நம்மை வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் ஜெயலலிதாவுக்கும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியினருக்கும் சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். 

மருத்துவர் அய்யா கைதுக்குப் பிறகு நடந்த வன்முறைகளைப் பார்த்து கூக்குரலிடும் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது மூன்று கல்லூரிப் பெண்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர், அதிமுக உறுப்பினர்களே குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டு மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்திய வரலாற்றில் இதைவிடக் கொடூர வன்முறையைச் செய்த அரசியல் இயக்கம் உண்டா?

சென்ற அதிமுக ஆட்சியின் போது அதிமுக அரசை எதிர்த்து கடற்கரைச் சாலையில் அமைதியாக ஊர்வலம் சென்ற திமுகவினர் மீது கடற்கரைச் சாலையை ஒட்டி இருந்த பில்லாகுப்பம் சேரியில் ரௌடிகளை மறைத்து வைத்து ஊர்வலம் அருகில் வந்தவுடன் பயங்கர ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் நடத்தியது யார்? திட்டமிட்டது யார்? வன்முறைகளைத் திட்டமிட்டுச் செய்தது யார்?

சட்டமன்றத்தில் பல்லைக்கடித்து, நாக்கைத் துருத்திய எதிர்க்கட்சித் தலைவர் விஜியகாந்தைப் பார்த்து தகுதியில்லாதவர்கள் பெரிய பதவிக்கு வந்தால் இப்படித்தான் என்று சட்டமன்றத்திலேயே நக்கலடித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா 1989ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டமன்றத்திலேயே கலவரங்கள் செய்யப்பட்டது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதியைப் பார்த்து “குத்துடா அவனை” என்று சொன்னது யார்? தகுதியுடையவர் யார்?

புராதனச் சின்னமான மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் மேல் ஏறி கொடிகளைக் கட்டினார்கள், புராதனச் சின்னங்களுக்குக் களங்கம் விளைவித்தார்கள் என்ற கூறுகிறீர்களே தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான கண்ணகி சிலையை உடைத்து, அருங்காட்சியகத்தில் தரையில் கிடத்தியது யார்? தமிழ்ச் சின்னங்களை மதிப்பவர்கள் யார்? மிதிப்பவர்கள் யார்?

வன்னியர் மாநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் குடித்திருக்கிறார்கள் என்றும், அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்றும் அடுக்கடுக்காக புகார்களைப் பதிவுச் செய்தார். 

உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரமணியம் சுவாமி, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குக் குறித்து மனுப் போட வந்தபோது இரண்டு புறமும் மகளிர் குடிப்போதையில் நின்று தங்கள் உள்ளாடைகளை உயர்த்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டியதாகப் பல பத்திரிக்கைகளில் வந்ததே அதைச் செய்தது யார்? திட்டமிட்டது யார்? இதைவிட அநாகரிகமான, காட்டு மிராண்டித் தனமான அருவெறுப்பான செயல் இருக்க முடியுமா? கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒழுக்கமான நடத்தையையும் பற்றிப் பேசத் தகுதியுடையவர்கள் யார்?

மாநிலத்தின் கவர்னர் என்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிச் செய்தார் என்று சொன்ன பெண் முதல்வர் யார்? அது எப்படிப்பட்ட நாகரிகம்? 

ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆசிட் வீசியது யார்? ஆசிட் வீசியவர்கள் பின்னால் யார் இருப்பதாகச் சுப்ரமணியம்சுவாமி குறிப்பிட்டார்? யார் வன்முறை அரசியல் செய்பவர்கள்? 

மயிலாடுதுறையில் நடந்த அரசு விழாவில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று கோபித்துக் கொண்டு பாதி விழாவில் மேடையில் இருந்து இறங்கிச் சென்ற முன்னால் அமைச்சர் மணிசங்கர் அய்யரை துரத்திச் சென்று அவர் காரை வழிமறித்து அவரைத் தாக்கியவர்கள் யார்? என்ன நாகரிகம் அது? 

இப்படி அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான, அருவெறுப்பான கொடுஞ்செயல்களைச் செய்தவர்களை சமூகத்துக்கு அடையாளம் காட்டாமல் அவர்களைப் போற்றிப் பேணும் ஊடகங்களே! பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் திராவிட இயக்கங்களை விட நூறு மடங்கு நாகரிகமானவர்கள், பண்பாடு உள்ளவர்கள்.

வயது வித்தியாசம் இல்லாமல் எத்துனை மூத்தவர்களாக இருந்தாலும் தன் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கித் தான் மரியாதைத் தர வேண்டும் என்ற குமட்டலெடுக்கும் செய்கையை வேடிக்கைப் பார்த்து “இதோ பார்” திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த மக்களை என்று இறுமாப்படைபவர் யார்?

பாட்டாளி மக்கள் கட்சியையும், வன்னியர் சமூகத்தையும் பழிபோட்டு, அவதூறு செய்வதோடு ஜெயலலிதா நின்றுவிடவில்லை. தன் சொந்த வெறுப்பையும், ஏன் பொறாமையையும் காட்டினார், “கடல் நீரை அள்ள முடியாது வன்னியரை வெல்ல முடியாது” எனவும் “வங்கக் கடலா, வன்னியக்கடலா”, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரைப் பெருவிழாவிற்குத் திரண்டு வாரீர் என விளம்பரம் செய்ததாகச் சொன்னார். 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவருடைய அமைச்சர்களும், சட்டமன்ற உறப்பினர்களும் பாடுகின்ற துதிகளோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. மன்னராட்சி நடந்த காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் கூட எந்த மன்னனைப் பற்றியும், உலகின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட பொய்ப் புகழ்ச்சிகளைச் செய்திருக்க முடியாது. பாட்டாளிகளின் இயல்பான தன்மான உணர்ச்சியும், இனப் பெருமையும் அவர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்திருக்கிறது.

இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாகக் கூறும் திரு. இராமதாசு, சந்தனமரக்கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையென்றால் எதற்காக சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது? என்று ஆத்திரப்படுகிறார்.

வீரப்பனை “எல்லைக் காவல் தெய்வம்” என்றே தர்மபுரி மாவட்ட மக்கள் அதிலும் குறிப்பாக பென்னாகரம் வட்ட மக்கள் நினைக்கிறார்கள். அந்த ஒரு மாவீரன் இருந்த வரையிலும் தான், ஒகேனக்கல் தமிழனின் சொத்து. இன்று அவர் மறைந்த பிறகு, மாண்டியாவில் இருந்து புதியதாகச் சாலைப்போட்டு வந்து கன்னடியர்கள் “ஒகேனக்கல் எங்களுடையது” என்று கூறுகிறார்கள். வீரப்பனை ஒரு குற்றவாளி என்று கருதித் தான் அவரைப் பிடித்து, நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்றது ஜெயலலிதாவின் அரசு. அவரைச் சுட்டவர்களுக்கு விருது வழங்கி மகிழ்ந்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பார்வையில் வீரப்பன் சந்தன மரக் கடத்தல்காரன், கொலைக்காரன் ஜெயலலிதாவின் பார்வையில் மாவீரன் பிரபாகரனே கொலைகாரன் தான். அதனால் தான் பிரபாகரனைக் கைது செய்து, தூக்கிலிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அவர் பார்வையில் தூக்கிலிட வேண்டியக் குற்றவாளி மாவீரன் பிரபாகரன். ஆனால் உலகத் தமிழர்கள் பார்வையில் அவர் ஈழ விடுதலைப் போரின் தன்னிகரில்லாத் தலைவர். தமிழ் ஈழத்தின் குடியரசுத் தலைவர் குற்றவாளியா, நல்லவரா என்ற ஒருவரைப் பற்றிய கருத்து அவரவர் அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்தது.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது அந்தக் கொலைக்கு காவல்துறை குற்றம் சுமத்திய முதல் குற்றவாளி கோட்சே. ஏழாவது குற்றவாளி வீர சாவர்க்கர் கொலைக் குற்றம் சாற்றப்பட்ட அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பே தடை செய்யப்பட்டு இந்திரா காந்தி ஆட்சியில் தான் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. வீரசாலர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் ஆர்.எஸ்.எஸ் காரன் என்று சொல்லிக் கொள்வதில் “பெருமைப்பட்டுக் கொள்கிறேன்” என்று சொன்ன வாஜ்பாயு பிரதமர் ஆனதும் வீரசாவர்க்கரின் படம் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்துக்கு சாவர்க்கரின் பெயர் வைக்கப்பட்டது. ஆட்சி மாறியது. அரசியல் நிலைப்பாடு மாறியது, காட்சியும் மாறியது, குற்றம் சாட்டப்பட்டவர் தியாகி ஆனார்.

ஜெயலலிதாவின் பார்வையில் வீரப்பன் குற்றவாளி. ஆனால் தருமபுரி மாவட்ட மக்களுக்கு எல்லைக் காவல் தெய்வம். 1983ல் இருந்து உலகில் உள்ள எல்லா காடுகளும், உலகத்தின் கார்பன் – டை - ஆக்ஸைடு தேவையில் நான்கில் ஒரு பங்கை சுழற்சிச் செய்கிற அமேசான் காடுகள் உட்பட இருபது விழுக்காடு குறைந்து இருக்கிறது. இந்தக் காலக் கட்டத்தில் உலகத்திலேயே 23விழுக்காடுகள் வளர்ந்த ஒரே காடு வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் காடுதான். வீரப்பன் இறந்தவுடன் ஹிந்து பத்திரிக்கையில் வந்தச் செய்தியில் வீரப்பன் காடுகளில் விலங்குகளோடு விலங்கா வாழ்ந்தாலும் மனிதப் பண்புகளோடு விளங்கினான். அவனைத் தேடிச் சென்ற காவல் துறையினர் மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளைப் போல நடந்து கொண்டார்கள் என்ற சொல்லப்பட்டிருந்தது. வீரப்பன் பெண்களின் காவலனாக இருந்தார்.

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் காணாமல் போன எங்கள் இளைஞர்கள் எங்கே அவர்கள் கொல்லப்பட்டார்களா? விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார்களா? உயிரோடு புதைக்கப்பட்டார்களா? விடை இல்லை.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது எத்தனை இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் அந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா? சந்தன மரங்களைக் கடத்தி விற்றதாகவும், யானைகளைக் கொன்று தந்தங்களை எடுத்து விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன் எத்தனை நிலங்களை வாங்கினார்? ஏசி காரில் சென்றாரா? பெரிய பங்களா கட்டினாரா? காட்டில் கட்டாந்தரையில் படுத்து, கலியும், கூழும் தானே உண்டார். அப்படியென்றால் அவரைப் பயன்படுத்தி பங்களா கட்டி, ஏசி காரில் பவனி வருபவர்கள் யார்? அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? இல்லையே!

நாளை பாட்டாளிகளின் ஆட்சி வந்தால் அரசியல் நிலைப்பாடு மாறும் வீரப்பனுக்குச் சிலை நிறுவப்படும். கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள், கற்பழித்தவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். 

நல்ல தீர்ப்பை நாடு தரும் போது, அங்கே, சிரிப்பவர் யார், அழுபவர் யார், தெரியும் அப்போது!

பதிவுகளை தொடர