Saturday 7 March 2015

ஈரோடு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் 07.03.2016

ஈரோடு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் பவானி ரோட்டில் உள்ள ரவி மகாலில் இன்று 07.03.2013 நடந்தது. 

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–


கடந்த ஆண்டு பா.ம.க. பொதுக்குழு கூடி அ.தி.மு.க.– தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. தலைமை ஏற்கும் அணி வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தனர். இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பா.ம.க.வின் நிலைப்பாடு, கொள்கைகள், திட்டங்கள் குறித்து விளக்கி கூறி வருகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை பற்றியும் கூறி வருகிறோம். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இதனால் மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க. விளங்கி வருகிறது.

பா.ம.க. தலைமை ஏற்கும் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்.

மதுவிலக்கு, ஊழல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறோம். ஊழலை ஒழிக்க சேவை உரிமை சட்டத்தை கொண்டு வருவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம்.

டெல்லியில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை ஒதுக்கி விட்டு கெஜ்ரிவாலை மக்கள் ஆதரித்துள்ளனர். அதேபோல தமிழக மக்களின் மனநிலையும் உள்ளது.
தேசிய அளவில் பா.ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணியில் இருந்து வருகிறது. மாநில அளவில் பா.ம.க. தலைமையில் கூட்டணிக்கு பா.ஜனதா வந்தால் வரவேற்போம்.

அ.தி.மு.க.– தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க.வால் மட்டுமே கூட்டணி அமைக்க முடியும். எங்கள் கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment