Tuesday 3 September 2013

மீண்டும் வாட்டும் மின்வெட்டு: மின்துறையில் அரசு தோல்வி – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

மீண்டும் வாட்டும் மின்வெட்டு: மின்துறையில் அரசு தோல்வி – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
காற்றின் புண்ணியத்தில் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த மின்வெட்டு மீண்டும் வாட்டத் தொடங்கி விட்டது. சென்னை தவிர மற்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நாள் தோறும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது மின்சாரம் ஆகும். அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் மின்சாரமின்றி எதுவும் இயங்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அ.தி.மு.க. அரசு இவ்விசயத்தில் தொலைநோக்கு பார்வையின்றி செயல்படுவதால், தமிழகம் இருண்ட மாநிலமாக மாறி வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு முழுமையாக போக்கப்படும் என்றார்.

அதன்பின்னர், 10.06.2011 அன்று சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர், ‘‘தமிழ்நாட்டில் தற்போது 3 மணி நேரமாக இருக்கும் மின்வெட்டு அடுத்த மாதம் முதல் 2 மணி நேரமாக குறைக்கப்படும். அதன்பின் படிப்படியாக மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்’’ என்றார். ஆனால், அதன்பிறகு மின்வெட்டு படிப்படியாக அதிகரித்து, வரலாறு காணாத வகையில் தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மின்வெட்டு அடுத்த 3 மாதங்களில் போக்கப்படும் என்று மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். மாதங்கள் போனதே தவிர மின்வெட்டு போகவில்லை.

2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி சட்டப்பேரவையில் இது பற்றி விளக்கமளித்த ஜெயலலிதா, ‘‘2012-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 1950 மெகாவாட், அக்டோபரில் 600 மெகாவாட் என மொத்தம் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2013-ஆம் ஆண்டு மத்தியில் மின் தட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் மின்னுற்பத்தி 8500 மெகாவாட்டில் இருந்து 6200 மெகாவாட் ஆக குறைந்ததே தவிர ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டின் பிற்பகுதி முதல் நடப்பாண்டின் முற்பகுதி வரை மின்நிலைமை மிகவும் மோசமானது. கோவை, திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் தினமும் ரூ. 1000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் இதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை.

நடப்பாண்டில் பிப்ரவரி 8-ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர்,‘‘தமிழகத்தில் 3312 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் வல்லூர் மின்திட்டத்தின் முதல் பகுதி செயல்படத் தொடங்கியிருப்பதால் 375 மெகாவாட் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. மீதமுள்ள 2937 மெகாவாட் மின்சாரத்தின் ஜூன் மாதத்திற்குள் 2175 மெகாவாட்டும், ஆண்டு இறுதிக்குள் 762 மெகாவாட்டும் கிடைக்கும். இதனால் 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது’’ என்று கூறினார். ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விட்ட நிலையில் முதலமைச்சர் கூறியதில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லை. தலா 600 மெகாவாட் திறன் கொண்ட வட சென்னை மற்றும் மேட்டூர் அனல் மின்நிலையங்களில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் மாதமே நடத்தப்பட்டாலும், தொழில்நுட்ப குறைபாடுகளால் அவை மூடப்பட்டதன் காரணமாக இன்று வரை மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை. அதேநேரத்தில் தீ விபத்துக் காரணமாக மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மெகாவாட் மின்னுற்பத்தியும், பராமரிப்பு குறைபாடுகளின் காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சராக இருந்தபோது 8500 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தியை 7900 மெகாவாட்டாக குறைத்தது தான் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை ஆகும்.


புதிய மின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதிலாவது தமிழக அரசு பொறுப்புடன் செயல்பட்டதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முந்தைய ஆட்சிகளில் உருவாக்கப் பட்ட 10,120 மெகாவாட் திறன் கொண்ட 6 மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அதுமட்டுமின்றி கடந்த 22.03.2012 அன்று தமிழகத்தின் தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ வெளியிட்ட முதலமைச்சர்,‘‘தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீடும், கடையும், தொழில்நிறுவனமும், வணிக நிலையங்களும் தரமான மின்சாரத்தை தடையின்றி பெற வேண்டும் என்பது தான் எனது நோக்கம்’’ என்றார். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆவணம் வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

அதன் கடந்த 20.10.2012 அன்று தமிழக அரசின் சூரிய ஒளி மின்கொள்கையை வெளியிட்ட ஜெயலலிதா, ‘‘ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் மொத்தம் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்’’ என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், தனியார் மூலம் 690 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் தான் வழங்கப்பட்டிருக்கின்றனவே தவிர, அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அடுத்த மூன்று மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும்; புதிய மின் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று ஜெயலலிதா பல தருணங்களில் கூறிய போதிலும் அதுவுமே நிறைவேறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, மின்வெட்டு விவகாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பதும், வெற்று வார்த்தைகளைக் கூறி மக்களை முதலமைச்சர் ஏமாற்றியிருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது. மின்வெட்டை சமாளிப்பதில் காற்றை நம்பும் அளவுக்குக் கூட ஆட்சியாளர்களை நம்பமுடியவில்லை என்று பொதுமக்கள் குமுறும் நிலை தான் இன்று தமிழகத்தில் காணப்படுகிறது.

இன்றைய நிலையில் தமிழகத்தின் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும் நிலையில் மின்னுற்பத்தி 8 ஆயிரம் மெகாவாட்டாகவே உள்ளது. காற்றாலைகள் மூலம் சுமார் 2000 மெகாவாட் முதல் 3200 மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்ததால் மின்வெட்டை சமாளிக்க முடிந்தது. காற்றாலை மின்சாரம் தற்போது 50 மெகாவாட்டுக்கும் கீழ் குறைந்துவிட்டதால் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கிவிட்டது. இது தான் ஜெயலலிதாவின் நூறாண்டு பேசும் ஈராண்டு சாதனையும், பல்லாண்டு பேசும் சரித்திரமும் ஆகும். மின்வெட்டை போக்குவதில் ஜெயலலிதா அரசு தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது.

No comments:

Post a Comment